தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம் 1952’-ல் (Employees Provident Fund - EPF) வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தம் ஒன்றைத் தீர்ப்பாக வழங்கி, ரூ.15,000-க்குக் கீழ் மாதச் சம்பளம் வாங்கும் தொழிலாளர் களைக் கௌரவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
தற்போது, அடிப்படைச் சம்பளம் (Basic wages) அகவிலைப்படி மற்றும் உணவுச் சலுகைக்கான பணமதிப்பு (Cash value of food concession) ஆகியவற்றின் கூட்டுத் தொகையில் 12% மட்டுமே இ.பி.எஃப் நிதியத்துகான மாதச் சந்தாவாக உள்ளது. மாதச் சம்பளம் ரூ.15,000-க்குகீழ் உள்ளவர் களுக்கு, இனி இவற்றுடன் சிறப்புப் படியையும் (Special Allowance) சேர்த்து, இ.பி.எஃப்-க்கான 12% சந்தா கணக்கிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தீர்ப்பளித்துள்ளது.
வழக்கின் வரலாறு
இந்த வழக்கு தொடங்கியது 2011-ல்; தீர்ப்பு இறுதியானது 28.2.2019-ல். இ.பி.எஃப் சந்தாவைக் குறைத்துக்கொள்வதற்காகவே அடிப்படைச் சம்பளமானது (Basic Wages) பல்வேறு அலவன்ஸுகளாகச் சிதறடிக்கப் பட்டுள்ளது. எனவே, ஸ்பெஷல் அலவன்ஸ் என்பது சம்பளத்தில் ஒரு பகுதிதான். இதையும் சேர்த்துதான் சந்தா கணக்கிடப்பட வேண்டும் என்பதே தீர்ப்பு.
இருபது பணியாளர்களாகக் கொண்ட அனைத்து நிறுவனப் பணியாளர்களுக்கும் இந்தத் தீர்ப்பு பயன்தரும் என்பது முக்கிய மான விஷயம். இந்தத் தீர்ப்பினைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
பலவகை பிராவிடன்ட் ஃபண்ட்
பிராவிடன்ட் ஃபண்டைப் பொறுத்த வரை பல வகைகள் உள்ளன. பிராவிடன்ட் ஃபண்ட் என்பது ஓய்வுக்காலப் பயன்பாட்டுக்கு உரியவைதான் என்றாலும், இதர பிராவிடன்ட் ஃபண்டுகளிலிருந்து இ.பி.எஃப் வேறுபடுகிறது.
இதர பிராவிடன்ட் ஃபண்டுகளில் செலுத்தப்படுவது ஊழியர் செலுத்திய பணம் மட்டுமே. பி.எஃப் செலுத்தும் ஊழியர்கள், தமது பி.எஃப் கணக்கில் எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் சந்தா செலுத்தலாம். மொத்த சம்பளத்தையும் மாதச் சந்தாவாகச் செலுத்தலாம். ஆனால், இ.பி.எஃப் அப்படியல்ல. இது பங்களிப்பு பிராவிடன்ட் ஃபண்ட் வகையைச் சேர்ந்தது. எனவே, நிர்வாகம் நிர்ணயித்துள்ள சதவிகிதத்தில்தான் சந்தா செலுத்த முடியும். ஏனென்றால், ஊழியரின் சந்தா தொகைக்கு இணையான தொகையை நிர்வாகமும் செலுத்தவேண்டியிருக்கும். எனவே, 12 சதவிகிதத்துக்குமேல் ஒரு ரூபாய்கூட உபரியாகச் செலுத்த முடியாது.
அவ்வாறு உபரியாகச் செலுத்தப்படும் சந்தா, ‘விருப்பச் சந்தா (Voluntary contribution)’ ஆகும். அதற்கு நிர்வாகப் பங்கு கிடைக்காது. மேலும், ஐந்தாண்டுகளுக்குக் குறையாமல் விருப்பச் சந்தாவைத் தொடர்ந்து செலுத்த வேண்டி யிருக்கும்.
இந்தத் தீர்ப்பின்படி, ஸ்பெஷல் அலவன்ஸ் தொகைக்கும் இனி 12% இ.பி.எஃப் சந்தா செலுத்த வேண்டும். நிர்வாகமும் அதேயளவு சந்தா செலுத்த வேண்டியிருக்கும்.
உதாரணமாக, ஒரு ஊழியருக்கான ஸ்பெஷல் அலவன்ஸ் ரூ.500 என்று வைத்துக்கொள்வோம். இதற்கு 12% தொகை என்பது ரூ.60, நிர்வாகம் செலுத்தும் தொகை ரூ.60 என மொத்தம் ரூ.120 சந்தாவில் அதிகரிக்கும்.
ஓர் ஊழியர் 35 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெறும்போது, அவரது சம்பளம் 10% வளர்ச்சியில் உயரும். இந்த 120 ரூபாய் 10% வட்டி வளர்ச்சியுடன் சேர்ந்து, ஓய்வுநாளில் ரூ.14,41,175 என்கிற அளவில் முதிர்வுத் தொகையைப் பெற்றுத் தரும். ஸ்பெஷல் அலவன்ஸ் சந்தாவால் மட்டும் கிடைப்பது இவ்வளவு பெரிய தொகை என்பதைப் பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறதல்லவா?
வட்டி நிர்ணயம்
தற்போது 8.65% என நிர்ணயிக்கப்படுள்ள வட்டி விகிதம் 10% அளவுக்கு வளருமா என்ற கேள்வி எழலாம். வளரக்கூடும் என்பதே அதற்கான பதில். எப்படி எனில், 1952-ல் இ.பி.எஃப் நடைமுறைக்கு வந்தபோது, அதற்கான வட்டி விகிதம் 3% மட்டுமே. அது 1989-90-ல் 12% என்ற உச்சத்தைத் தொட்டது. 1999-2000 வரையிலான பத்தாண்டு காலம் வட்டி விகிதம் 12% என்கிற அளவிலேயே நீடித்தது. அதன்பின் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களுக்குப்பின், தற்போது கிடைக்கப்போகும் வட்டி 8.65%. அதாவது, முந்தைய ஆண்டைவிட 0.10% அதிகம். எனவே, வளர்ச்சி என்பது சாத்தியமே.
அதுமட்டுமல்ல, பிராவிடன்ட் ஃபண்ட் அனைத்துக்கும் வட்டியைத் தீர்மானிப்பது மத்திய அரசின் நிதி அமைச்சகம். ஆனால், இ.பி.எஃப் வட்டியானது அதன் மத்திய அறங்காவலர் வாரியத்தால் (Central Board of Trustees) மத்திய அரசைக் கலந்தாலோசித்து நிர்ணயிக்கப்படுகிறது. இதர பி.எஃப்-களுக்கான வட்டி மூன்று மாதத்துக்கு ஒருமுறை மாறுபடும். ஆனால், இ.பி.எஃப் வட்டி ஆண்டுக்கு ஒருமுறை தான் தீர்மானிக்கப்படும். 1952 முதல் இன்றுவரை இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது.
முதன்மை நிதியம்
நம் நாட்டில் உள்ள நான்கு முக்கிய பங்களிப்பு நிதியங்களாக, பங்களிப்பு பிராவிடன்ட் ஃபண்ட் (Contributory Provident Fund), தேசிய பென்ஷன் திட்டம் (N.P.S), பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (C.P.S), தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (E.P.F) உள்ளன. இவற்றுள் நிறுவனத் தரப்பு இணைச் சந்தா 12% பெற்றுவருவது இ.பி.எஃப் மட்டுமே. ஏனைய நிதியங்களில் நிறுவனப் பங்குச் சந்தா, இன்றுவரை 10% மட்டுமே.
தொடரும் சலுகை
1.4.2018 முதல் இ.பி.எஃப்-க்கு அரசு ஒரு புதிய சலுகையை வழங்கி வருகிறது. அதாவது, நிறுவனம் செலுத்த வேண்டிய இணை சந்தாவை, மூன்றாண்டுகளுக்கு அரசே செலுத்தும் என்பது தான் அந்த மகத்தான சலுகை. புதிய சந்தாதாரர் களுக்கான இந்தச் சலுகையைப் பெற 31.3.19-க்கு முன் இ.பி.எஃப் சந்தாதாரராகச் சேர்ந்துவிட வேண்டும் என்பது எல்லா எல்லோரும் கவனத்தில்கொள்ள வேண்டிய ஒன்று.
தற்போது 1,000 ரூபாயாக உள்ள மாதாந்திர குறைந்தபட்ச பென்ஷனை, மேலும் உயர்த்தி வழங்கப் பரிசீலிக்கப்பட்டு வருவது மற்றொரு சலுகை. 8.55% சதவிகிதமாக இருந்த வட்டி விகிதம் 0.10% அதிகரித்து, 8.65 சதவிகிதமாக உயர்வடைவது மகிழ்ச்சியான செய்தி. இந்த மூன்றையும் தாண்டி, ஸ்பெஷல் அலவன்ஸுக்கும் 12% பி.எஃப் சந்தா என்பது மாபெரும் சலுகை.
வீடுசேரும் ஊதியம்
சம்பளத்தில் செய்யப்படும் பிடித்தங்கள் போக, நிகரத் தொகையை (Carry home salary) வீடு போய்ச் சேரும் ஊதியம் என்பார்கள். ஸ்பெஷல் அலவன்ஸில் 12 சதவிகிதத்தை இ.பி.எஃப் சந்தாவாகச் செலுத்தும்போது, வீடு சேரும் சம்பளம் குறைந்துவிடும் என்றாலும் ஓய்வுக்கால தொகுப்பு நிதி அதிகரிக்கும் என்பதால் சந்தோஷப்படலாம். இன்று சில நூறுகளை நாம் இழந்தாலும், ஓய்வுக் காலத்தில் பெரும் தொகை கிடைக்கும் என்பது முக்கியம்!
ப.முகைதீன் சேக்தாவூது
நன்றி ஆனந்த விகடன்